Monday, August 24, 2015

அகத்தியரின் அருள் மழை !!! அகஸ்தியரின் மகிமைகள் சுவாரஸ்யமான தகவல்கள் !!! சித்தர்களால் சொல்லப்பட்ட அகத்தியரை தரிசிக்கும் மஹா மந்திரம் .

“அகத்தியர்” – இந்த பெயரை கேள்விபடாதவர்களே இல்லை எனலாம். கும்பமுனி, குருமுனி, தமிழ்முனி என்றெல்லாம் சிறப்பித்து அழைக்கப்படுபவர் நம் அகத்தியர் பெருமான். சித்தர்களுக்கெல்லாம் தலைவர் இவரே. முக்காலமும் அறிந்தவர். கடவுளர் அனைவரின் அருளை ஒருங்கே பெற்றவர் நம் அகத்தியர் பெருமான்.
அகத்தியர் வாழும் மலை பொதிகை மலை ஆகும். சிவபெருமானின் திருமணத்தின் போது ஏற்பட்ட பூமி சமமற்ற நிலையை நீக்க இறைவனால் தென்னாடு அனுப்பப்பட்டவர். தென்னாட்டில் சிவசக்தி திருமணத்தை இறைவன் அருளால் கண்டவர். சித்த மருத்துவத்தின் தந்தை இவரே. இவருக்கு தெரியாத மருத்துவ முறைகளே இல்லை. அகத்தியர் மருத்துவம் மட்டுமல்லாமல் மணி, மந்திரம், சோதிடம், வானவியல், தமிழ், சமஸ்கிருதம், ரசவாதம் இவற்றிலெல்லாம் சிறந்து விளங்கியவர்.
சிவபெருமானின் மகனான குமரக்கடவுளிடம் தமிழ் கற்றவர். தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர். கருணையில் தாயைவிட மேலானவர். வீணை வாசிப்பதில் சிறந்த சிவபக்தனும் இலங்கை வேந்தனுமாகிய இராவணனை வென்றவர். காவிரியை அடக்கி கமண்டலத்தில் நிறுத்தியவர். அறுமுகக்கடவுளின் அன்பிற்கும் அருளிற்கும் பாத்திரமானவர். ஏழுகடல் நீரை குடித்து இந்திரனுக்கு போரில் உதவியவர். விந்தியமலையை அடக்கியவர். வாதாபி, வல்லபன் ஆகிய அரக்கர்களை அழித்தவர்.
ராமபிரானுக்கு ஆதித்ய ஹிருதயம் மற்றும் சிவகீதை இவற்றை உபதேசித்தவர். கும்பத்திலிருந்து தோன்றியவர். தமிழை வளர்த்த சித்தர் அகத்தியர். முருகனின் ஆணைக்கிணங்க அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலை இயற்றியவர். சித்தர்களுக்கெல்லாம் சித்தர். இவர் இயற்றிய அகத்தியர் ஜீவநாடி நூல் மிகவும் புகழ் பெற்றது. அகத்தியர் எழுதிய நூல்கள் பல. அவற்றுள் சில மட்டுமே கிடைத்துள்ளன. மின்சாரத்தை முதன் முதலில் கண்டறிந்தவர் அகத்தியரே. இதற்கு அகத்தியர் சமஸ்கிருத மொழியில் இயற்றிய அகத்திய சம்ஹிதை என்ற நூலே சாட்சி.
அகத்தியருக்கு சிவபெருமான் எப்போது காட்சியளித்தாலும் திருமணக்கோலத்திலேயே காட்சி தந்துள்ளார். அகத்தியரின் காலம் 9000 ஆண்டுகளுக்கு முன்பானது. இன்றும் அகத்தியர் ஜீவநாடியில் நம்மில் பலருக்கு வழிகாட்டியுள்ளார். இவரின் கருணை அளவிடற்கரியது. எல்லா உயிர்களின் துயரை துடைத்து அருள்புரிந்து கொண்டிருக்கிறார். நவகிரகங்களில் புதனை பிரதிபலிப்பவர். அறிவின் சிகரம். சித்த வைத்தியத்தின் பிதாமகர் இவரே.
அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும், குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் கருத்துகள் நிலவுகின்றன.
முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர். இந்திரன் அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர். தேவேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.
அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றார். கயிலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார்.
மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும் உயரவில்லை. இராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர்.
சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார். தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார்.
அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.
தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி “அகத்தியம்” என்னும் நூலை இயற்றினார்.
அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறி சமைத்து படைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர் இதனை அகத்தியரிடம் முறையிட்டனர். அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.
சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் ‘காக உரு’ கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.
இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.
தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார்.
புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.
சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது.
அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம்.
அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.
அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.
அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார். மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:
1. அகத்தியர் வெண்பா
2. அகத்தியர் வைத்தியக் கொம்மி
3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
5. அகத்தியர் வைத்தியம் 1500
6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி
7. அகத்தியர் கர்ப்பசூத்திரம்
8. அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
9. அகத்தியர் வைத்தியம் 4600
10. அகத்தியர் செந்தூரம் 300
11. அகத்தியர் மணி 4000
12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
13. அகத்தியர் பஸ்மம் 200
14. அகத்தியர் நாடி சாஸ்திரம்
15. அகத்தியர் பக்ஷணி
16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
17. சிவசாலம்
18. சக்தி சாலம்
19. சண்முக சாலம்
20. ஆறெழுத்தந்தாதி
21. காம வியாபகம்
22. விதி நூண் மூவகை காண்டம்
23. அகத்தியர் பூசாவிதி
24. அகத்தியர் சூத்திரம் 30
25. அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
26 அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அகத்தியரின் வேறு பெயர்கள்:
----------------------------------------------
தமிழ் முனி
மாதவ முனி
மாமுனி
குறுமுனி
குருமுனி
திருமுனி
முதல் சித்தர்
பொதிகை முனி
அமர முனி
குடமுனி
அகத்தியர் பெருமானின் பூசை முறைகள். வழிபடும் முறை:
--------------------------------------------------------------------------
தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். படத்தின் முன்பாக பித்தளை அல்லது செம்பு அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும்.
பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.
முக்கரணங்களின் சுத்தியோடு மஞ்சள் பூசிய சிறுபீடத்தில் அகத்தியரின் சிலையையோ அல்லது அவரது படத்தையோ வைத்து அதற்கு முன்பாக இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும். சுத்தமான செம்பில் நீரை வைக்க வேண்டும். பின்பு அவரது தியான செய்யுளை மனதார 3 முறை செபிக்க வேண்டும்.
தியானச் செய்யுள்:
-------------------------------
ஐந்திலக்கணம் தந்த அகத்தியரே
சித்த வேட்கை கொண்ட சிவ யோகியே
கடலுண்ட காருண்யரே
கும்பமுனி குருவே சரணம் சரணம்
பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.
பதினாறு போற்றிகள்:
-----------------------------------
1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
6. சித்த வைத்திய சிகரமே போற்றி!
7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
8. இசைஞான ஜோதியே போற்றி!
9. உலோப முத்திரையின் பதியே போற்றி!
10. காவேரி தந்த கருணையே போற்றி!
11. அகத்தியம் தந்த அருளே போற்றி!
12. இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
16. இன்னல்கள் அகற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!
நிவேதனம்
----------------
பஞ்சாமிர்தம், பழங்கள், சக்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் இளம் பச்சை நிற வஸ்திரம் அணிவித்து புதன்கிழமை பூசை செய்யவும். நிறைவாக “ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி!” என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும்.
அகத்திய முனிவரின் பூசா பலன்கள்
---------------------------------------------------------
1. இசையிலும் கவிதையிலும் மேன்மையுண்டாகும்.
2. கல்வித்தடை நீங்கும்.
3. புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கும்.
4. முன்வினை பாவங்கள் அகலும்.
5. பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்.
6. பேரும், புகழும், மதிப்பும் தேடி வரும்.
7. பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.
8. சகலவிதமான நோய்களும் தீரும்.
9. குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
அகத்தியர் பெருமானை வழிபட வழிபட நமது நெடுநாளைய பிரச்சனைகள் எல்லாம் ஒவ்வொன்றாக தீர ஆரம்பிக்கும். நாளடைவில் அவரது கருணைக்கு நாம் பாத்திரமாவோம். நமது வாழ்க்கையை மாற்றி அமைப்பார் அகத்தியர். தவறு செய்பவர்களையும் மன்னித்து திருத்துவார். பிறவி என்னும் கடலை கடக்க உதவுவார். நமது கர்மவினைகளை அடியோடு போக்குவார்.
கும்ப லக்கினம் மற்றும் கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு எளிதில் காட்சி தருவார் என்பது கூடுதல் செய்தி.
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி
ஓம் போக சித்தாய நமஹ
ஓம் சிவ சிவ ஓம்
அகத்தியர் தரிசன விதி!
---------------------------------------
ஒரு வெள்ளைத்துண்டினை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.அதை தினமும் காலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் ஏதாவது ஒரு மணி நேரம் (4.30 டூ 5.30 அல்லது 5.00 டூ 6.00 இப்படி) அல்லது இரவு 8 மணி முதல் ஏதாவது ஒரு மணி நேரம் இந்த வெள்ளைத்துண்டினை விரித்து அதில் அமர்ந்து, விநாயகரை நினைத்துவிட்டு,இந்த அகத்திய தியானத்தை 108 முறை ஜபித்துவரவும்.45 நாட்களில் அகத்தியரை நேரில் அல்லது கனவில் சந்திக்கலாம்.
நாம் முற்பிறவிகளில் கடுமையான பாவம் செய்திருந்தால், இந்த கட்டுரையைக் கூட வாசிக்கும் சந்தர்ப்பம் அமையாது;ஓரளவு பாவம் செய்திருந்தால் கனவில் அகத்தியர் தோன்றுவார்.அல்லது நேரில் வருவார்.
கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் காலை அல்லது இரவில் 108 முறை ஜபிக்கவும்.
மந்திரம்:
-------------
“ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே
என் குருவே வா வா வரம் அருள்க
அருள் தருக அடியேன் தொழுதேன்.”
கடும் பாவம் சிலர் முற்பிறவிகளில் செய்திருந்தால்,45 நாட்களுக்கும் மேலாக தியானம் செய்ய வேண்டும்.
இந்த 45 நாட்களில் தெரியாமல் கூட அசைவம் சாப்பிடக்கூடாது.மது கூடாது.துக்க,ஜனன வீடுகளுக்குச் செல்லக்கூடாது.இந்த தியானத்தை முடித்தப்பின்னர் வேண்டுமானால் மனைவியுடன் கூடலாம். முறையற்ற உறவைத்தவிர்க்க வேண்டும்.
பெண்களும் இந்த தியானத்தை மேற்கொள்ளலாம்.அவர்கள் தீட்டுநாட்கள் 5 நாட்கள் வரை அகத்திய தியானத்தைக் கண்டிப்பாக தவிர்க்கவும்.
ஒளிரும் தங்க நிறத்தில் 4 அல்லது 5 அடி உயரத்தில் தங்க நிற தாடியும்,ஜடாமுடியும் வைத்திருப்பார்.
அகத்தியரை நேரில் தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்கள்,முதலில் அவரை கையெடுத்துக்கும்பிட வேண்டும்.பிறகு, அவரது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும்.
பொதுவாக கும்ப ராசி மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு விரைவில் அகத்திய சித்தரின் தரிசனம் கிட்டும். முற்பிறவிகள் ஒன்றில் அகத்திய வழிபாடு செய்திருந்தாலும், அகத்தியருக்கு கோவில் கட்டியிருந்தாலும்,அகத்தியரின் புகழைப் பாடியிருந்தாலும், ஏராளமான புண்ணியம் செய்திருந்தாலும் விரைவில் அகத்திய தரிசனம் கிட்டும் என்பது நிஜம். அகத்திய மகரிஷியை தரிசியுங்கள்; என்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் குருதேவா என வேண்டுங்கள்.அதை விட பிறவிப்பயன் வேறில்லை.
ஆன்மிக உயர்வு தரும் அகத்தியர் மூல மந்திரம்.
---------------------------------------------------------------------------
அகத்திய மகரிஷியை வழிபடுபவர்கள் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். அசைவம் கண்டிப்பாக சேர்க்க கூடாது அகத்தியர் ஞானத்தை வழங்குபவர். ஆன்மிக ரீதியான உயர்வுகளுக்கு அகத்தியரை வழிபட வேண்டும்.
கீழ்க்கண்ட அகத்தியர் மூலமந்திரம் சொல்லி அகத்தியரை சுத்தமான மனதுடன் வழிபடவேண்டும். தொடர்ந்து வழிபட்டு வந்தால் அகத்தியர் உங்களின் ஆன்மிக வழிகாட்டியாக சூட்சும ரூபமாக உதவுவார்.
மது, மாமிசம்,புகைப்பழக்கம் அறவே தவிர்த்தவர்கள்தான் இந்த மந்திரத்தை சொல்லி அகத்தியர் வழிபாடு செய்ய வேண்டும்.
ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே
சாப பாவ விமோட்சனம்
ரோக அகங்கார துர் விமோட்சனம்
சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம்
சற்குருவே ஓம் அகஸ்திய
கிரந்த கர்த்தாய நம.

No comments:

Post a Comment